ரஷியாவில் ஆஸ்பத்திரி தீ விபத்துக்கு மத்தியிலும் நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த டாக்டர்கள்


ரஷியாவில் ஆஸ்பத்திரி தீ விபத்துக்கு மத்தியிலும் நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த டாக்டர்கள்
x
தினத்தந்தி 2 April 2021 5:44 PM GMT (Updated: 2 April 2021 5:44 PM GMT)

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது.

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது.2 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில்‌ உள்ள இதய நோய் பிரிவில் நேற்று காலை நோயாளி ஒருவருக்கு டாக்டர்கள் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தனர்.‌ 8 டாக்டர்களை கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இதயநோய் சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் நோயாளிகள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.அதேசமயம் இந்த தீ விபத்துக்கு மத்தியிலும் இதயநோய் சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தங்களின் அறுவை சிகிச்சையை தொடர்ந்தனர்.இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அறுவை சிகிச்சை அறைக்கு தீ பரவாமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் டாக்டர்கள் எந்த சலனமும் இன்றி தங்களது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த நோயாளி அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பற்று அருகிலுள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கு மத்தியிலும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 


Next Story