மாலி: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் பலி


மாலி: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் பலி
x
தினத்தந்தி 3 April 2021 4:37 AM GMT (Updated: 3 April 2021 4:37 AM GMT)

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.

பமாகோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா, ஐஎஸ் மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும், பயங்கரவாதத்தை தடுத்து மீண்டும் அமைதி திரும்ப 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினர் மீதும், ஐ,நா. அமைதிப்படையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அஹூலிஹட் என்ற இடத்தில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். ஐ.நா. அமைதிப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் சில பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நைஜர் மற்றும் பர்கினோ பசோ ஆகிய நாடுகளிலும் பயங்கரவாத ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.    

Related Tags :
Next Story