அபுதாபியில் உள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பூங்காவை பார்வையிட்ட அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ஜான் கெர்ரி


அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ஜான் கெர்ரி
x
அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ஜான் கெர்ரி
தினத்தந்தி 3 April 2021 10:17 PM GMT (Updated: 3 April 2021 10:17 PM GMT)

அபுதாபியில் உள்ள உலகின் மிகப் பெரிய நூர் சூரிய ஒளி பூங்காவை அமெரிக்க ஜனாதிபதியின் பருவநிலை தொடர்பான பிரதிநிதி ஜான் கெர்ரி நேற்று பார்வையிட்டார்.

நூர் சூரிய ஒளி பூங்கா

அமெரிக்க ஜனாதிபதி பருவநிலை தொடர்பான பிரதிநிதி ஜான் கெர்ரி 2 நாட்கள் பயணமாக அமீரகம் வந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் மத்திய கிழக்கு பகுதிக்கு ஜான் கெர்ரி மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று அவர் அபுதாபியின் அல் தப்ரா பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய நூர் சூரிய ஒளி பூங்காவிற்கு வந்தார். அவரை அமீரக தொழில் மற்றும் மேம்பாட்டு தொழில்நுட்பத்துறை மந்திரியும், அமீரகத்தின் பருவநிலை மாறுபாட்டுக்கான சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபர் வரவேற்றார்.

பின்னர் ஜான் கெர்ரிக்கு டாக்டர் சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபர் அமீரகத்தின் மாற்று எரிசக்தி திட்டப்பணிகள் குறித்து விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

9 ஜிகா வாட்டாக அதிகரிக்கும்

அபுதாபி நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல் தப்ரா பகுதியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணியானது கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 4 திட்டப்பணிகள் சூரிய ஒளி மின்சாரத்தை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இறுதி வரை அமீரகத்தின் மாற்று எரிசக்தி திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 2.3 ஜிகா வாட்டாக இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்த அளவானது 9 ஜிகா வாட்டாக அதிகரிக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இந்த திட்டப்பணிகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மெற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு

இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் இந்த சூரிய ஒளி மின் திட்டப்பணிகளை ஜான் கெர்ரி பார்வையிட்டார். அப்போது அவர் அமீரகம் மேற்கொண்டு வரும் மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அபுதாபியில் வளைகுடா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பகுதிகளைச் சேர்ந்த உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கும் பருவநிலை மாறுபாடு தொடர்பான கூட்டத்தில் ஜான் கெர்ரி பங்கேற்று உரை நிகழ்த்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story