நைஜீரியாவில் சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 1,800 கைதிகள் தப்பி ஓட்டம்


நைஜீரியாவில் சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 1,800 கைதிகள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 6 April 2021 5:35 PM GMT (Updated: 6 April 2021 5:35 PM GMT)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இமோ மாகாணத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட இயக்கமான பியாப்ரா என்கிற பிரிவினைவாத இயக்கம் அரசு படைகளுடன் சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில் இமோ மாகாணத்தின் ஒவர்ரி நகரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலை மீது நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.லாரிகள் மற்றும் பஸ்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் சிறைச்சாலையை சுற்றி வளைத்து வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 1,800-க்கும் அதிகமான கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.அவர்களில் 6 கைதிகள் மட்டும் தாமாக சிறைக்கு திரும்பிய நிலையில் மற்ற அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடி பிடிப்பதற்காக ஒவர்ரி நகரில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.‌

அதேசமயம் ஒவர்ரி நகர போலீசார் பியாப்ரா பிரிவினைவாத அமைப்பே இந்த தாக்குதலுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

 


Next Story