அபுதாபி அல் பரக்கா முதல் அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் தொடங்கியது


அபுதாபி அல் பரக்கா முதல் அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 6 April 2021 9:13 PM GMT (Updated: 6 April 2021 9:13 PM GMT)

அபுதாபி அல் பரக்கா முதல் அணு உலையில் இருந்து வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

இதற்கு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

முதல் அணு உலை

அபுதாபியில் உள்ள அல் தப்ரா பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டில் அல் பரக்கா என்ற பெயரில் பிரமாண்டமான 4 அணு உலைகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து, படிப்படியாக கட்டுமான பணிகள் நிறைவு பெற்று கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், முதல் அணு உலையில் இருந்து சோதனை முறையில் மின்சாரம் உற்பத்தி செய்ய தொடங்கியது.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி, முதல் அணு உலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் அமீரகத்தின் முதன்மை மின் இணைப்புடன் இணைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 2-வது அணு உலையானது கடந்த மார்ச் மாதம் உரிமம் வழங்கப்பட்டு மின்சார உற்பத்திக்கு தயாராக உள்ளது.

அடுத்ததாக தயாராகி வரும் உள்ள 3-வது அணு உலை 94 சதவீதமும், 4-வது அணு உலை 89 சதவீதமும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அணு உலையை இயக்கி வரும் நவா எரிசக்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தக ரீதியில் தொடங்கியது

இந்த நிலையில், முதல் அணு உலையில் இருந்து வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் மற்றும் வர்த்தக ரீதியிலான செயல்பாடுகள் நேற்று முதல் தொடங்கியது. இதற்கு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பாராட்டும், மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தின் அணு எரிசக்தி நிலையம் இன்று (அதாவது நேற்று) வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. 10 ஆண்டுகளின் முயற்சி, 2 ஆயிரம் அமீரகத்தின் பொறியாளர்கள், 80 சர்வதேச பங்குதாரர்கள் கூட்டு முயற்சியில் வளர்ச்சிப்பாதையில் இந்த நிலையம் அடி எடுத்து வைத்துள்ளது.

அரபு நாடுகளில் முதல் அணு உலை மின்சார தொடர்பில் வர்த்தக ரீதியில் அடி எடுத்து வைக்கிறது. அமீரகத்தில் உள்ள மக்கள் சார்பில் இதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் எனது சகோதரர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடின உழைப்பு

அல் பரக்கா அணு எரிசக்தி நிலையம் இன்று வர்த்தக ரீதியில் செயல்பட தொடங்கியுள்ளது அமீரகத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த அடுத்த கட்ட நகர்வானது ஒட்டுமொத்த மின்சாரத் துறையை மேம்படுத்தி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும். இதனை கடின உழைப்புடன் சாத்தியமாக்கிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கலந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story