ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: வியன்னா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணைந்தது


ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: வியன்னா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணைந்தது
x
தினத்தந்தி 7 April 2021 11:32 PM GMT (Updated: 7 April 2021 11:32 PM GMT)

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் இணைந்து உள்ளது.

டெஹ்ரான்,

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

ஒபாமா ஆட்சிக்காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்திருந்தாா்.

எனினும், ஒபாமாவுக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த டிரம்ப், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அதிரடியாக அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது குறித்து ஈரானுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா கூறுகிறது.

ஆனால் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப் பெற்றால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை பின்பற்றுவோம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து உரசல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்கும் முயற்சியாக, அதில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளான இங்கிலாந்து, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இடையே ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை தொடங்கியது.‌ ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்குவதற்கும், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு ஈரான் திரும்புவதற்கும் ஒரு வழியை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் தற்போது இணைந்துள்ளது.‌

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடா்பாக வியன்னாவில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் எங்களது பிரதிநிதிகளும் பங்கேற்பாா்கள்.

இந்த பேச்சுவாா்த்தை ஓா் ஆக்கப்பூா்வமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த பேச்சுவாா்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீா்வு கிடைக்கும் என்று நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. இது கடினமான பேச்சுவார்த்தையாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். விவாதங்கள் கடுமையானதாக இருக்கும்.

எனவே இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடனடி முன்னேற்றத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் நாங்கள் ஈரானுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவோம் என்ற எதிா்பாா்ப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story