இலங்கை அழகிப்போட்டியில் குழப்பமோ குழப்பம் பட்டத்தை வழங்கி, பறித்து, மீண்டும் அளித்தனர்


இலங்கை அழகிப்போட்டியில் குழப்பமோ குழப்பம் பட்டத்தை வழங்கி, பறித்து, மீண்டும் அளித்தனர்
x
தினத்தந்தி 8 April 2021 11:11 PM GMT (Updated: 8 April 2021 11:11 PM GMT)

இலங்கை தலைநகர் கொழும்புவில் திருமணமான பெண்களுக்கான திருமதி இலங்கை அழகிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

கொழும்பு,

இந்தப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா திருமதி இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. பூங்கொத்து வழங்கப்பட்டது. அவர் அதை கையில் வைத்துக்கொண்டு மேடையில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது 2019-ம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் திருமதி உலக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கரோலின் ஜூரி மேடையில் பார்வையாளர்கள் மத்தியில் பேசினார்.

அவர், ‘‘இந்தப்போட்டியில் திருமதி இலங்கை அழகியாக புஷ்பிகா டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது, அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவே தகுதி பெறவில்லை. அவர் விவாகரத்தானவர்” என கூறியதுடன் அவரிடம் இருந்து மகுடத்தை வலுக்கட்டாயமாக பறித்தார். மகுடம், இந்த போட்டியில் இரண்டாவது இடம்பிடித்தவருக்குத்தான் போக வேண்டும் என்று அறிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் மறுநாளில் புஷ்பிகா டி சில்வா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “நான் விவாகரத்து செய்யவில்லை. அதே நேரத்தில் கணவரை பிரிந்து மட்டுமே வாழ்கிறேன். நான் தகுதியற்றவள் என கருதி இருந்தால் போட்டியின் ஆரம்பத்திலேயே என்னை நீக்கி இருக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

இதையடுத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கொழும்பு நகரில் நடத்தி மீண்டும் அவருக்கே திருமதி இலங்கை அழகி மகுடத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கி அறிவிப்பு வெளியிட்டனர். நடந்தவற்றுக்காக அவர்கள் மன்னிப்பும் கேட்டனர். இந்த குழப்பங்கள் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story