போர்ச்சுகல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிப்பு


போர்ச்சுகல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 2:09 AM GMT (Updated: 9 April 2021 2:09 AM GMT)

போர்ச்சுகல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ்பன்,

ஆகஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி இன்று உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, சுமார் 34 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதில் 169 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக பதிவு செய்துள்ளது.

மேலும் 60 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கே இந்த பிரச்சினை அதிக அளவில் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனை தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த வகையில் போர்ச்சுகல் நாட்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே சுமார் 4 லட்சம் டோஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு கருதி, இனி வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வு தான் என்பதால், ஏற்கனவே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என போர்ச்சுகல் அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தவிர பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story