ஈரானுடனான மறைமுக பேச்சுவார்த்தை: வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2021 9:19 PM GMT (Updated: 10 April 2021 9:19 PM GMT)

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்த சூழலில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இதனிடையே ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முனைப்பு காட்டி வருகின்றது. இதனையடுத்து ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஈரான் - அமெரிக்கா அதிகாரிகள் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் மறைமுக பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 

இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story