அணு உலையில் பயங்கர வெடி விபத்து: இருளில் மூழ்கிய ஈரான் அணு உலை மையம்


அணு உலையில் பயங்கர வெடி விபத்து: இருளில் மூழ்கிய ஈரான் அணு உலை மையம்
x
தினத்தந்தி 11 April 2021 10:58 PM GMT (Updated: 11 April 2021 10:58 PM GMT)

ஈரானின் நாதன்ஸ் அணு உலை மையம் நேற்று திடீரென இருளில் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஹ்ரான்,

ஈரானின் நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.‌ இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.‌

எனினும் இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

மேலும் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறினார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது: ஈரானின் நடான்ஸ் அணு உலை மையத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டத் தொடங்கிய சில மணி நேரத்தில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, அணு உலை வளாகப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

ஈரானின் தேசிய அணுசக்தி தொழில்நுட்ப தினமான ஏப்.10-ஆம் தேதி புதிய செறிவூட்டல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது


Next Story