பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் முதன்முறையாக 114 பேர் கொரோனாவால் உயிரிழப்பு


பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் முதன்முறையாக 114 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 April 2021 2:05 AM GMT (Updated: 12 April 2021 2:05 AM GMT)

பாகிஸ்தானில் நடப்பு 2021ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக ஒரே நாளில் அதிகம் பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி வருகிறது.  இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.  ரமலான் பண்டிகை வரும் சூழலில், போதிய தடுப்பூசிகளை இருப்பில் வைத்து கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இந்த மாதம் பிற்பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் வரவுள்ளன.  நாடு முழுவதும் கொரோனா அலை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது.  இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 5,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என நேற்று தகவல் வெளியானது.  இதேபோன்று, 73,875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு 10.96 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இந்த நிலையில், நடப்பு 2021ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக ஒரே நாளில் அதிகம் பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.  நேற்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஒரு நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பது அந்நாட்டில் இது 6வது முறையாகும்.

Next Story