ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் 439 கைதிகள் விடுதலை அதிபர் உத்தரவு


ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் 439 கைதிகள் விடுதலை அதிபர் உத்தரவு
x
தினத்தந்தி 12 April 2021 11:13 AM GMT (Updated: 12 April 2021 11:13 AM GMT)

அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 439 கைதிகளை விடுதலை செய்து அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அபுதாபி,

அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு 439 கைதிகளை விடுதலை செய்து அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

439 கைதிகள் விடுதலை

அமீரகத்தில் புனித ரமலான் மாதம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரமலான் மாதம் தொடங்க இருப்பதையொட்டி மாநகராட்சியின் சார்பில் அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள முக்கிய பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான், இந்த புனித மாதத்தையொட்டி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறைக்கைதிகள் 439 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த கைதிகள் அனைவரும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆவர். அவர்களது கடன் உள்ளிட்டவற்றை அமீரக அதிபர் தீர்த்து வைத்து அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்னடத்தை அடிப்படையில்...

நன்னடத்தை, மனிதாபிமான அடிப்படையிலும், மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையின் மூலம் கைதிகள் புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் சேவை செய்ய புதிய வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதலையை தங்களுக்கு கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக கருதி கைதிகள் திருந்தி வாழ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சார்ஜா, அஜ்மான்

சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி ரமலான் மாதம் தொடங்க இருப்பதையொட்டி, 206 சிறைக்கைதிகளை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கைதிகள் அனைவரும் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அஜ்மான் ஆட்சியாளர் மேதகு ஷேக் ஹுமைத் பின் ராஷித் அல் நுயைமி ரமலான் மாதம் தொடங்க இருப்பதையொட்டி, 55 சிறைக்கைதிகளை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கைதிகள் நன்னடைத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் ரமலான் மாதத்தை கொண்டாடவும், ஒரு புதிய வாழ்க்கையை அமைக்கவும் உதவியாக இருக்கும்.


Next Story