மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 82 பேர் சுட்டுக்கொலை


மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 82 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 12 April 2021 11:52 AM GMT (Updated: 12 April 2021 11:52 AM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 82 பேர் சுட்டுக்கொலை.

நேபிடாவ், 

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில் ராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது.

இதனிடையே ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மியான்மர் மக்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூன் அருகிலுள்ள பாகோ நகரில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக பேரணியாக சென்றனர்.

குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவர்களை தடுத்து நிறுத்திய ராணுவ வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டியடிக்க முற்பட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனை சமாளித்து தொடர்ந்து முன்னேறி சென்றனர்.

இதையடுத்து ராணுவ வீரர்கள், போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்‌‌. இதில் 82 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

கடந்த மாதம் 14-ந் தேதி ஆயுதப்படை தினத்தன்று போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிக பட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.

Next Story