பாலியல் தொல்லை: கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம்


பாலியல் தொல்லை: கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம்
x
தினத்தந்தி 12 April 2021 12:32 PM GMT (Updated: 12 April 2021 12:32 PM GMT)

கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை குறித்து கடிதம் எழுதி உள்ளனர்.

கலிபோர்னியா

கூகுள் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.அதில், கூகுள் நிறுவனம் பெண்களை துன்புறுத்துபவர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு, பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மவுண்ட்டைன் வியூவில் உள்ளது. இங்கு பணியாற்றிய எமி நீட்ஃபெல்ட் என்பவர் தி நியூயார்க்ஸ் டைம்ஸ்  பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கூகுள் அலுவலகத்தில், தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளித்தும், நிறுவனம் அலட்சியப் படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

தொல்லை கொடுத்தவருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என கூகுள் தலைமை தெரிவித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

ஒரு கட்டத்தில் தொல்லையை தாங்க முடியாமல் பணியில் இருந்து வெளியேறிய பின்னர் தான், இதேபோல பல ஊழியர்கள் பாலியல் மற்றும் இனவெறி தொல்லைகள் அனுபவித்தது தெரியவந்ததாக கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.இதுவரை 20,000-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பணியிலிருந்து இதே காரணங்களுக்காக வேலையை விட்டு நின்றதாகவும், இருப்பினும்நிறுவனம் இன்னும் எந்த விதத்திலும் மாறவில்லை என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, தாங்கள் அனுபவித்து வரும் தொல்லையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீட்ஃபெல்ட் பிரச்னையை சுட்டிக் காட்டியதுடன், கூகுள் எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தவர்களை காப்பாற்றி வந்தது என்பதை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, கூகுள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஊழியர்களின் புகார்களை புலனாய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது என்றும் புகார் அளிப்போருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story