பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
x
தினத்தந்தி 12 April 2021 1:40 PM GMT (Updated: 12 April 2021 1:40 PM GMT)

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மருத்துவமனை முன் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் ஹெண்ட்ரி-டுனால்ட் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹெண்ட்ரி-டுனால்ட் மருத்துவமனையின் முன் வாசலில் இன்று மதியம் 1.40 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) துப்பாக்கியுடன் இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர் மருத்துவமனை முன் நின்றுகொண்டிருந்த ஒரு ஆண் நபர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இந்த தாக்குதலை தடுக்கவந்த மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த பெண் காவலாளி மீதும் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஆண் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்மநபர் தனது இருசக்கரவாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், இது பயங்கரவாத தாக்குதலா அல்லது திட்டமிடப்பட்டு ஒரு நபரை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Next Story