உணவுச் சந்தைகளில் பாலூட்டிகள் விற்பனைக்கு தடை உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள்


உணவுச் சந்தைகளில் பாலூட்டிகள் விற்பனைக்கு தடை உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 April 2021 12:14 PM GMT (Updated: 13 April 2021 12:14 PM GMT)

உணவுச் சந்தைகளில் பாலூட்டிகள் விற்பனைக்கு தடைவிதிக்க உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவா

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,72,48,180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,04,26,941 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 58 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,63,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,792 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில் உணவுச் சந்தைகளில் பாலூட்டிகள் விற்பனைக்கு தடைவிதிக்க உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் உணவுத் தேவையைப் பாரம்பரிய உணவுச் சந்தைகளே பூர்த்தி செய்கின்றன. எனினும் உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ், முதன்முதலில் சீன நாட்டின் உகான் மாகாணத்தில் உள்ள பாரம்பரியமான மொத்த உணவுச் சந்தையில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் ஆரம்பக்கட்ட நோயாளிகளாக, உகான் சந்தையில் உள்ள கடைகளின் முதலாளிகள், சந்தை ஊழியர்கள் மற்றும் கடைகளுக்கு அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர்களே இருந்தார்கள்.

விலங்குகள் குறிப்பாக வன உயிரிகள்தான், மனிதர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்ட தொற்றுகளுக்கான காரணிகளாக இருக்கின்றன. குறிப்பாக வனப் பாலூட்டிகள் புதிய நோய்கள் தோன்றுவதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால் உயிருள்ள விலங்குகளைக் கொண்டு வந்து, தோலை உரித்து விற்பனை செய்யும் பாரம்பரிய உணவுச் சந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நோய்க் கிருமி பரவுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. இந்நிலையில், வனங்களைச் சேர்ந்த உயிருள்ள பாலூட்டிகளைப் பிடித்து உணவுச் சந்தைகளில் விற்பதை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்." இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளது.

Next Story