ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தங்கள் படையினர் அனைவரையும் திரும்பப்பெற அமெரிக்கா திட்டம்


ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தங்கள் படையினர் அனைவரையும் திரும்பப்பெற அமெரிக்கா திட்டம்
x
தினத்தந்தி 13 April 2021 8:26 PM GMT (Updated: 13 April 2021 8:26 PM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்கா தனது படையினர் முழுவதையும் திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

ஆனாலும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற டிரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே 1-ம் தேதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தலீபான்களுடனான ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்த கோரசம்பவத்தின் 20 வது ஆண்டு விழா வரும் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

அந்த நாளுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் அனைவரையும் திரும்பப்பெற ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜோ பைடன் இன்று வெளியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் 6,600 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 2,500 பேர் அமெரிக்க வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story