அபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’


அபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’
x
தினத்தந்தி 13 April 2021 10:16 PM GMT (Updated: 13 April 2021 10:16 PM GMT)

அபுதாபியில் மிக அபூர்வமான ஆள்காட்டி பறவைகள் தென்பட்டுள்ளது. இந்த பறவைகள் நடமாடும் காட்சிகள் அபுதாபி- துபாய் எல்லைப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆள்காட்டி பறவை

கருப்பு நிறத்தில் மூக்குடைய கரையோரம் வாழும் பறவையினம் ‘லேப்விங்ஸ்’ எனப்படும் ஆள்காட்டி பறவையாகும். மனிதர்களையோ அல்லது மற்ற எதிரி விலங்கினங்களையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும்.இதன் காரணமாக இந்த பறவை ஆள்காட்டி குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பது விந்தையான தகவலாகும்.

குளிர் காலங்களில் வசிக்கும்

பெரிய பறவைகள் அதிகபட்சமாக 35 செ.மீ. நீளம் வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் கொஞ்சம் நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே வெளியில் நீட்டியவாறும் இருக்கும்.

இவை பொதுவாக இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதியிலும், நீர் நிலை அருகேயும் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் இவை சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கின்றன.

நடமாடும் காட்சிகள் பதிவு

அமீரகத்தை பொறுத்தவரையில் மிக அரிதாக காணப்படும் பறவையாகும். ஆனால் இந்த ஆண்டில் தற்போது அதிகபட்சமாக 34 ஆள்காட்டி பறவைகள் வருகை புரிந்துள்ளன. இதற்கு முன் 12 பறவைகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அபுதாபி- துபாய் எல்லை பகுதி அருகே உள்ள அல் மஹா பைவோர் விவசாய பண்ணை அருகே இந்த பறவைகள் பறந்து உலா வந்து கொண்டு நடமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வெயில் காலம் தொடங்கினால் இந்த பறவை அங்கிருந்து சென்று விடும். இந்த அரிய வகை பறவை இனத்தை பாதுகாக்க அபுதாபி முகம்மது பின் ஜாயித் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story