மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு ஆதரவு


மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு ஆதரவு
x
தினத்தந்தி 14 April 2021 1:04 AM GMT (Updated: 14 April 2021 1:04 AM GMT)

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக தேடப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி, அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய தொழிலதிபருமான தஹாவுர் ராணா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.ராணாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளதால், அவரை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசை இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் இந்தியா தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தநிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அரசு சார்பில் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், ‘‘குற்றவாளிகளை நாடு கடத்த இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது. ராணாவை நாடு கடத்தும் கோரிக்கை, இந்த ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறது. ஆகவே, 
அவரை நாடு கடத்தும் கோரிக்கையை அமெரிக்க அரசு எப்போதும் ஆதரிக்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு, ஜூன் 24-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் தெரிவித்தார்.

Next Story