ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளும் வெளியேறுகிறது - அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை


ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளும் வெளியேறுகிறது - அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை
x
தினத்தந்தி 14 April 2021 9:24 PM GMT (Updated: 14 April 2021 9:24 PM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் நேட்டோ படைகள் திரும்பப்பெறப்பட உள்ளது.

பெல்ஜியம்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க படையினர் 2,500 பேரும், நோட்டோ படையினர் சுமார் 7,000 பேரும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். 

ஆனால், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலீபான்கள்-ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற டிரம்ப் நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை மே 1-ம் தேதிக்குள் திரும்பபெறுவதும் சாத்தியமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் (2500 வீரர்கள்) திரும்ப்பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இதனை தொடர்ந்து 36 நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் வீரர்களை திரும்பப்பெறுவதாக நேற்று அறிவித்தது.

நேட்டோ அமைப்பை சேர்ந்த சுமார் 7000 வீரர்கள் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்க படையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்கா தனது படைகளை திரும்பப்பெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மே 1-ம் தேதி முதல் துவங்க உள்ளது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அவர்களுடன் இணைந்து படைகளை வெளியேற்றுவது தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் தலைமையில் பெல்ஜியம் நாட்டில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி  லாய்டு ஆஸ்டினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மே 1-ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது. 7000 வீரர்களையும் திரும்பப்பெறும் நடைமுறை சில மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story