துபாயில் பிரான்ஸ் ஸ்கை டைவிங் வீரர் உயிரிழப்பு: ‘‘அவசரகால பாராசூட்டை பயன்படுத்தாதே விபத்துக்கு காரணம்’’ விசாரணை அறிக்கையில் தகவல்


துபாயில் பிரான்ஸ் ஸ்கை டைவிங் வீரர் உயிரிழப்பு: ‘‘அவசரகால பாராசூட்டை பயன்படுத்தாதே விபத்துக்கு காரணம்’’ விசாரணை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 15 April 2021 4:38 PM GMT (Updated: 15 April 2021 4:38 PM GMT)

கடந்த ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டு ஸ்கை டைவிங் வீரர் உயிரிழந்தார்.

இது குறித்து நடந்த புலன் விசாரணையில், அவசரகால பாராசூட்டை அவர் பயன்படுத்தாதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.இது குறித்து அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

ஸ்கை டைவிங் சாகச வீரர்

துபாயில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்கை டைவிங் வீரர் வின்சென்ட் ரெபெட் (வயது 36). இவர் மிகவும் தேர்ச்சி பெற்ற ஜெட்விங் பைலட் ஆவார். அதாவது இறக்கைகளை பொருத்திக்கொண்டு பறக்கும் சாகசத்தில் ஈடுபடுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்தில் 20 ஆயிரம் அடி உயரத்தில் இறக்கைகளை பொருத்திக்கொண்டு பறப்பதில் வல்லவர்.

துபாயின் புர்ஜ் கலீபா உள்ளிட்ட வானுயர்ந்த கட்டிடங்களுக்கு இடையே பறந்து சென்று பல்வேறு சாகசங்களை புரிந்தவர். இவருடைய சாகச வீடியோக்கள் சமூக ஊடகத்தில் வைரலாகி வந்தது.

விபத்தில் உயிரிழப்பு

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி துபாய் பாலைவன பகுதி ஒன்றில் சாகசம் செய்வதற்காக திட்டமிட்டார். அங்கு 800 அடியில் இருந்து குதிப்பது குறித்து குழுவினருடன் ஆய்வு செய்துள்ளார். அதில் ஆபத்து காலத்தில் பைரோ ராக்கெட் எனப்படும் அவசர கால பாராசூட்டை பயன்படுத்துவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை பயன்படுத்தாமல் குதித்ததால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து புலன் விசாரணை நடந்து வந்தது. வின்சென்ட் ரெபெட் கீழே குதிப்பதற்கு முன் அவசர கால பாராசூட்டை ஏன் அவர் தேர்வு செய்யவில்லை? என்பது பற்றி புலன் விசாரணை குழுவினரால் தீர்மானிக்க முடியவில்லை.

அவசரகால பாராசூட்

வின்சென்ட் ரெபெட்டின் ஹெல்மெட் பகுதியில் இணைக்கப்பட்ட கேமராவில் உள்ள வீடியோ அவர் தரையில் மோதிய பின்னரே பாராசூட் விரிந்ததை காட்டுகிறது. அவரது கைகள் சாதாரண பாராசூட்டை விரிப்பதற்கு முயற்சி செய்தது தெரிந்தது. அந்த ஜெட் என்ஜினில் எந்தவிதமான எந்திர கோளாறும் ஏற்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேபோல் உயரத்தில் இருந்து குதிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரும் விபத்தை ஏற்படுத்த காரணம் இல்லை. எனவே விசாரணை முடிவில் அவர் அவசரகாலத்தில் பயன்படுத்தும் பாராசூட்டை பயன்படுத்தவில்லை. அதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story