ஈராக்கில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 4 பேர் பலி


ஈராக்கில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 4 பேர் பலி
x
தினத்தந்தி 15 April 2021 9:42 PM GMT (Updated: 15 April 2021 9:42 PM GMT)

ஈராக் நாட்டில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் உள்ள சர்த் நகரின் சந்தைபகுதியில் நேற்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனாலும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story