டென்மார்க்கில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தம்


டென்மார்க்கில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தம்
x
தினத்தந்தி 16 April 2021 10:13 AM GMT (Updated: 16 April 2021 11:08 AM GMT)

டென்மார்க் நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கோபன்ஹேகன்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் சிலர் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் பலருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த ஐரோப்பிய மருந்து நிறுவனமும் இந்த பக்கவிளைவு ஏற்படுவதை உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக பல ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வயது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இதனை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்மார்க் நாட்டிலும் தற்போது அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக டென்மார்க் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதாலும், பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அது பயத்தை அதிகரிக்கலாம் என்பதாலும், தற்போது டென்மார்க்கில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து ஆய்வு செய்த பின்னர் மீண்டும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என்றும் டென்மார்க் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story