கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்


கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 16 April 2021 10:45 AM GMT (Updated: 16 April 2021 10:45 AM GMT)

துபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

துபாய்,

துபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துபாய் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாதுகாப்பு விதிமுறைகள்

துபாயில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறதா? என மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாதத்தில் மட்டும், துபாயில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் சரியாக அணிந்துள்ளனரா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறுகின்றதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வின் போது 1 லட்சத்து 77 ஆயிரத்து 169 நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வந்துள்ளது. இதன் மூலம் 97.06 சதவீத நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

276 நிறுவனங்கள் மூடப்பட்டது

இதேபோல கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றாத நிறுவங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் துபாயில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 276 நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டது. 379 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. மேலும் 2 ஆயிரத்து 318 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story