உலக செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் - கண்ணீர் மல்க விடை கொடுத்த அரச குடும்பத்தினர் + "||" + Body of Prince Philip of England in good health - Royal family responds with tears

இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் - கண்ணீர் மல்க விடை கொடுத்த அரச குடும்பத்தினர்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் - கண்ணீர் மல்க விடை கொடுத்த அரச குடும்பத்தினர்
இங்கிலாந்து இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக நீண்டநாள் அரச பதவியில் இருந்தவருமான இளவரசர் பிலிப் கடந்த 9-ந் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

இளவரசரின் மறைவையொட்டி இங்கிலாந்தில் 8 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ஏப்ரல் 17-ந் தேதி இளவரசரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளவரசரின் உடல் சவப்பெட்டியுடன் வின்ட்சர் கோட்டையில் வைக்கப்பட்டது.

வழக்கமாக, மன்னர் குடும்பத்தில் யாராவது உயிரிழந்துவிட்டால், அரசு மரியாதையுடன், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இறந்தவர்களுக்கு தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்துவார்கள்.

ஆனால், கொரோனா நோய் தொற்றின் காரணமாகவும், இளவரசர் பிலிப்பின் தனிப்பட்ட விருப்பத்தின் பேராலும் அவரது இறுதி சடங்கு ஆரவாரமின்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என அரச குடும்பம் அறிவித்தது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இளவரசர் பிலிப்பின் இறுதி அஞ்சலி மற்றும் ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், தேவாலயத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. உள்ளூர் நேரப்படி மதியம் 2.40 மணி அளவில் வின்ட்சர் கோட்டையின் தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பின் உடல், கோட்டையின் ‘ஸ்டேட் என்ட்ரன்ஸ்' எனப்படும் நுழைவாயிலில் சில நிமிடங்கள் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இளவரசர் பிலிப்புக்கு மிகவும் பிடித்த மாற்றியமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் காரில் அவரது சவப்பெட்டி ஏற்றப்பட்டு, செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.

அப்போது ‘கிரனடியர் கார்ட்ஸ்' என்றழைக்கப்படும் இங்கிலாந்து ராணுவத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பை நடத்தினர். ஊர்வலத்தின்போது இருபுறமும் 700-க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊர்வலத்தில் இளவரசரின் சவப்பெட்டி வைக்கப்பட்ட காருக்கு பின்னால் அவரது வாரிசுகள் நடந்து சென்றனர்.

அதேசமயம் ராணி இரண்டாம் எலிசபெத் முன்னதாகவே செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் வந்து காத்திருந்தார்.

ஊர்வலத்தின்போது ராணுவத்தினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க இளவரசருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ஊர்வலம் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தை வந்தடைந்ததும், இளவரசர் உடலை ‘ரைபில்ஸ்' எனப்படும் ராணுவக் குழுவினர் பெற்றுக்கொண்டு தேவாலயத்துக்கு உள்ளே எடுத்துச் சென்றனர்.

அங்கு பேராயர் ஜஸ்டின் வெல்பி இளவரசரின் உடலைப் பெற்று மதச்சடங்குகளை நடத்தினார்.

அப்போது ராணி இரண்டாம் எலிசபெத்துடன், இளவரசர் பிலிப்பின் 3 மகன்கள், ஒரு மகள் மற்றும் இளவரசர் ஹாரி உள்பட 3 பேரப்பிள்ளைகள் என மிகவும் நெருக்கமான உறவினர்கள் 30 பேர் மட்டும் தேவாலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேவாலயத்துக்குள் அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க ராணி இரண்டாம் எலிசபெத் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தார்.

மதச்சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு உள்ளூர் நேரப்படி சரியாக மாலை 3 மணிக்கு நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் இளவரசர் பிலிப் உடல், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சவப்பெட்டியானது மின்மோட்டார் மூலம் ராயல் வால்ட் அறைக்குள் இறக்கப்பட்டது. அப்போது அரச குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்தனர். கண்ணீர் மல்க பிலிப்புக்கு விடை கொடுத்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.