பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு


பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு
x
தினத்தந்தி 18 April 2021 9:49 PM GMT (Updated: 18 April 2021 9:49 PM GMT)

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.



உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.

2015-ம் ஆண்டு கையெழுத்தான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் உலக நாடுகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்.உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. எனவே பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தநிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கடந்த வாரம் சீனாவுக்கு சென்றார்.

அங்கு அவர் ஷாங்காய் நகரில் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஷி ஜென்ஹூவாவை நேரில் சந்தித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க ‌ ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதி பூண்டன.

/

Next Story