யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட வேட்டைக்காரர்கள் - ஒருவர் பலி


யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட வேட்டைக்காரர்கள் - ஒருவர் பலி
x
தினத்தந்தி 20 April 2021 6:02 AM GMT (Updated: 20 April 2021 6:02 AM GMT)

யானைகளை வேட்டையாட சென்ற வேட்டைக்காரர்கள் யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

ஜோகனஸ்பர்க்,

யானையை வேட்டையாட வந்த  வேட்டைக்காரனை யானைகளே காலால் மிதித்துக்கொண்ட சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அரங்கேறியுள்ளது. 

ஆப்பிரிக்க காடுகளில் யானைகள் அதிக அளவில் காணப்படுகிறது. காடுகளில் சுற்றித்திரியும் யானைகளை அதன் தந்தங்களுக்காக வேட்டையாடும் கும்பலும் ஆப்பிரிக்க காடுகளில் அதிகரித்துள்ளன. அவ்வாறு யானைகளை வேட்டையாடுபவர்களை தடுக்கும் வகையில் ஆப்பிரிக்க வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.    

அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா நாட்டின் குர்கர் தேசிய பூங்கா வனப்பகுதியில் உள்ள யானைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். காட்டின் மையப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது யானை வேட்டைக்கார்கள் 3 பேர் அங்கு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்துள்ளனர்.

வனத்துறையினரை பார்த்த யானை வேட்டைக்காரர்கள் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் வேகமாக தப்பியோடியுள்ளனர். ஆனால், அவர்கள் காட்டுயானைகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்த பகுதிக்குள் எதிர்பாராத விதமாக நுழைந்து அவைகளிடம் சிக்கிக்கொண்டனர். 

அப்போது அங்கு ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்த காட்டு யானைகள் வேட்டைக்காரர்கள் 3 பேரையும் கடுமையாக தாக்கியது. தாக்குதலுக்கு உள்ளான 1 வேட்டைக்காரன் தனது கண்ணில் காயம் ஏற்பட்டு யானைகளிடம் இருந்து தப்பியோடிவிட்டான். ஆனால், எஞ்சிய 2 வேட்டைக்காரர்களையும் யானைகள் கூட்டமாக கூடி தாக்கியுள்ளன. அதில் 1 வேட்டைக்காரனை யானைகள் காலால் மிதித்து கொன்றுள்ளன. மற்றொரு வேட்டைக்காரன் யானைகள் தாக்கியதில் கடுமையான காயமடைந்தான்.

யானைகள் தாக்குதலை நடத்தி விட்டு சிறிது நேரம் கழித்து அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்றன. அப்போது, வேட்டைக்காரர்களை துரத்தி வந்த வனத்துறையினர் யானைகள் தாக்கி படுகாயமடைந்திருந்த வேட்டைக்காரனை கண்டுபிடித்தனர். உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும், யானைகள் காலால் மிதித்து உயிரிழந்த மற்றொரு வேட்டைக்காரனின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மற்றொரு வேட்டையனையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

காட்டு யானைகள் தாக்கி யானை வேட்டைக்காரன் உயிரிழந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story