ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து - உள்நாட்டில் கொரோனா அதிகரிப்பால் நடவடிக்கை


ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து - உள்நாட்டில் கொரோனா அதிகரிப்பால் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 April 2021 9:36 AM GMT (Updated: 21 April 2021 9:36 AM GMT)

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் பிரதமர் பதவியை ஷின்சோ அபே கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டின் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக யோஷிஹைட் சுகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இதற்கிடையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக இந்த மாதம் இறுதி நாட்களில் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருந்தார். அதேபோல் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் செல்லவிருந்தார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல், பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். 

ஜப்பான் நாட்டில் நேற்று 4 ஆயிரத்து 342 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் டோக்கியோ, ஒசலா, ஹியோகோ மாகாணங்களில் அவசர நிலை பிறப்பித்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story