கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுமா? வெள்ளை மாளிகை பதில்


கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுமா? வெள்ளை மாளிகை பதில்
x
தினத்தந்தி 24 April 2021 5:40 PM GMT (Updated: 24 April 2021 5:40 PM GMT)

கொரோனா நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுமா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை பதில் அளித்துள்ளது.

வெள்ளை மாளிகை பதில்
உலகம் இதுவரை கண்டிராத வகையில் இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடி நிலையில் இருந்து இந்தியா மீள்வதற்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தற்போது உலகளாவிய இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது.நாங்கள் இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண உதவும் வழிகளை அடையாளம் காண்பதற்கு அரசியல் ரீதியாகவும், நிபுணர்கள் மட்டத்திலும் உள்ள அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.

தொடர்ந்து விவாதிக்கிறோம்...
எதிர்காலத்துக்கான தடுப்பூசி உருவாக்குதல் மற்றும் வினியோகம் பற்றி விவாதிப்பதில் இந்தியா நமது ‘குவாட்’ கூட்டாளிகளில் ஒன்றாகும். (குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்).தொற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு அவசர நிவாரண பொருட்கள், மருத்துவ நுகர்பொருட்கள், தொற்றுநோய் பயிற்சி மற்றும் வென்டிலேட்டர்களை நாங்கள் வழங்கி இருக்கிறோம். தொற்று நோய்களுக்கு தயார் ஆவதற்கும், தற்போது நாம் எதிர்கொள்ளும் கொரோனாவை கையாள்வதற்கும் 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10,500 கோடி) வழங்கி இருக்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.வேறு முன்னோட்டமாக கூற என்னிடம் ஏதுமில்லை. ஆனால், இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து நாங்கள் அவர்களுடன் பல மட்டங்களில் தொடர்பில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணைந்து செயல்படும் அமெரிக்க அமைப்பு...
இதே போன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி கூறுகையில், “இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது என தெளிவாக கூற முடிகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள், தொழில்நுட்ப உதவிகளையும், உதவிகளையும் வழங்க இந்தியாவில் உள்ள அதன் தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்டுகின்றன” என குறிப்பிட்டார்.மேலும் அவர் கூறுகையில், “இது ஒரு மோசமான சூழ்நிலை ஆகும். நாங்கள் எந்த வகையில் உதவ முயற்சிக்கிறோம், விஷயங்கள் எவ்வாறு செல்கின்றன என்பதை பார்க்க வேண்டும்” எனவும் கூறினார்.

இதே போன்று இந்தியாவுக்கு உதவுவது தொடர்பான கருத்துகளை அமெரிக்க அதிகாரிகள் பலரும் கூறி உள்ளனர்.

Next Story