கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - அமெரிக்கா


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - அமெரிக்கா
x
தினத்தந்தி 25 April 2021 4:48 AM GMT (Updated: 25 April 2021 4:48 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தியா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு  இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. 

கொரோனா பாதிப்புடன் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதனால், நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வருகிறது. 

இவ்வாறாக கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து,  பிரான்சு உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. அந்த வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்தியாவுக்கு துணை நிற்போம் எனத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை இதுபற்றி கூறுகையில், “ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம்” என  தெரிவித்துள்ளது. 

Next Story