கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன், மருந்துகளை வழங்க ஜெர்மனி முடிவு


கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன், மருந்துகளை வழங்க ஜெர்மனி முடிவு
x
தினத்தந்தி 26 April 2021 11:14 PM GMT (Updated: 26 April 2021 11:14 PM GMT)

ஜெர்மனி கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை வழங்குகிறது.

பெர்லின்,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.  இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  சமீப நாட்களாக 3 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  2,812 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்து உள்ளது.  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,13,658 ஆக உள்ளது.

இந்தியாவில், தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவில் கிடைக்கப்பெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இந்நிலையில், ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் கூறும்பொழுது, இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் போன்றவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வழங்குவதற்கான ஆலோசனைகளை அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

ஜெர்மனி அரசு அந்நாட்டு குடிமக்களை தவிர்த்து இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து பயணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.  2வது அலை அதிக சக்தியுடன் இந்தியாவில் வீசி வருகிறது.  இந்த சூழலில் ஜெர்மனியில் புதிய பரவல் ஏற்பட்டு விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக நாங்கள் விரைவாக செயல்பட்டது சரியே என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.




Next Story