பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் இந்திய பயணிகளுக்கு தடை


பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் இந்திய பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 28 April 2021 7:30 AM GMT (Updated: 28 April 2021 7:30 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிலா,

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் உலக அளவில் உச்சமடைந்து காணப்படுகிறது. இதனால், இந்தியாவுடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ், கம்போடியா அகிய நாடுகளிலும் இந்திய பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மற்றும் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கம்போடியா நாட்டிலும் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பயணிகள் மற்றும் இந்தியா வழியாக வரும் வேறு நாட்டு பயணிகளுக்கும் கம்போடியாவில் நுழைய மறு அறிவிப்பு வரும்வரை தடை விதிக்கப்படுவதாகவும், கடந்த 3 வாரங்களில் இந்தியா சென்று திரும்பிய எந்த பயணியும் கம்போடியாவில் நுழைய முடியாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Next Story