இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்த ரஷியா


இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்த ரஷியா
x
தினத்தந்தி 28 April 2021 5:12 PM GMT (Updated: 28 April 2021 5:12 PM GMT)

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை ரஷியா அனுப்பி வைத்துள்ளது.

மாஸ்கோ,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் மோடியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். இதில், இந்தியாவில் நிலவி வரும் கொரோனா சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு 22 டன் மருத்துவ உபகரணங்களை ரஷியா அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பாக, ரஷிய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

இந்த கடினமான சூழ்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடிக்கு உறுதுணையாக இருப்பதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு அவசரகால மனிதாபிமான உதவி அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பாக, ரஷிய அவசரகால அமைச்சரவை ஏற்கனவே இன்று இந்தியாவுக்கு 22 டன் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது. அதில் 20 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 75 வெண்டிலேட்டர்கள், 150 மருத்துவ கண்காணிப்பு கருவிகள், 2,00,000 மருந்துகள் அடக்கம். ரஷியாவின் உதவிக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story