மியான்மர்: ராணுவ படைத்தளங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


மியான்மர்: ராணுவ படைத்தளங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 29 April 2021 4:52 PM GMT (Updated: 29 April 2021 4:52 PM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துளன.

நைபிடா, 

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. 

ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மியான்மர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் மக்வே மற்றும் மெய்கிடிலா ஆகிய இரண்டு நகரில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான படைத்தளங்களை குறிவைத்து ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இன்று ராக்கெட் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் படை தளங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், கரீன் மற்றும் கஞ்சின் மாகாணங்களில் வசித்துவரும் பழங்குடியினத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மீது மியான்மர் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மியான்மரில் ராணுவத்திற்கும், ராணுவ ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே தொடர்ந்து கடுமையான மோதல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story