‘சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை' - அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் பேச்சு


‘சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை - அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் பேச்சு
x
தினத்தந்தி 29 April 2021 11:56 PM GMT (Updated: 29 April 2021 11:56 PM GMT)

சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் கூறியதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் தெரிவித்தார்.

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்று 100 நாட்களாகி உள்ளது. இதையொட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த இரவில் நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றியும், நமது ஜனநாயகத்துக்கு புத்துயிரூட்டுவது குறித்தும், இதற்கு எழுந்துள்ள நெருக்கடி மற்றும் வாய்ப்பு பற்றியும் பேச வந்திருக்கிறேன். இந்த நூற்றாண்டின் மோசமான தொற்றுநோயை சந்தித்துள்ளோம். (1929-ம் ஆண்டு நேரிட்ட) மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இப்போது அப்படியொரு நெருக்கடியை சந்தித்துள்ளோம்.

இப்போது நான் பதவி ஏற்று 100 நாட்களுக்கு பிறகு தேசத்துக்கு பதில் அளிக்க வந்துள்ளேன். அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. அது ஆபத்தை சாத்தியமாக மாற்றுகிறது. நெருக்கடியில் இருந்து வாய்ப்புக்கு மாறுகிறோம். வாழ்க்கை நம்மை கீழே தள்ளலாம். ஆனால் அமெரிக்காவில் நாம் ஒருபோதும் கீழே போக மாட்டோம். நாம் எப்போதும் எழுந்து நிற்போம்.

நான் பதவி ஏற்று 100 நாளில் 100 மில்லியன் ( 10 கோடி) கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி அளித்தேன். இப்போது நாம் 100 நாளில் 220 மில்லியன் பேருக்கு (22 கோடி) தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.

தங்கள் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லத்தொடங்கி இருப்பது பெற்றோரின் முகங்களில் புன்னகையை தவழ விட்டிருக்கிறது. ஆசிரியர்கள், பள்ளிக்கூட பஸ் டிரைவர்கள், கேண்டீன் ஊழியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வீடுகளில் குடியிருப்பவர்களை வெளியேற்றி விடாமல் இருக்க வாடகை உதவி அளிக்கிறோம். சிறி ய தொழில்கள் நடக்கவும், தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் பணியில் தொடரவும் நிதி உதவி வழங்குகிறோம். 100 நாளில் உதவி பெறுவதற்காக கட்டுபடியாகக்கூடிய பராமரிப்பு சட்டத்தில் 8 லட்சம் அமெரிக்கர்கள் சேர்ந்துள்ளனர். அமெரிக்க மீட்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். இதற்காக நன்றி.

100 நாளில் பொருளாதாரம், 13 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. இதுவரை எந்த ஜனாதிபதியின் ஆட்சியிலும் இப்படி நடந்தது இல்லை. நமது பொருளாதாரம் இந்த ஆண்டு 6 சதவீத வளர்ச்சியை அடையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. 40 ஆண்டுகளில் இதுதான் மிக வேகமானபொருளாதார வளர்ச்சியாக இருக்கும். அமெரிக்கா வேகமாக முன்னேறுகிறது. இதை தடுத்து நிறுத்த முடியாது.

21-ம் நூற்றாண்டை வெல்வதில் நாம் சீனாவுடனும், பிற நாடுகளுடனும் போட்டி போடுகிறோம்.

அமெரிக்க வேலை வாய்ப்பு திட்டம், பல கோடி பேருக்கு நல்ல சம்பளத்துடன்கூடிய வேலை வாய்ப்பை உருவாக்கும். அனைத்து முதலீடுகளும், அமெரிக்கர்களை வாங்குங்கள் என்ற ஒரே கொள்கையால் வழிநடத்தப்படும். அமெரிக்க டாலர்களை அமெரிக்க பொருட்களை வாங்க பயன்படுத்துங்கள்.

ஆண்டுக்கு 4 லட்சம் டாலருக்கு குறைவாக (சுமார் ரூ. 3கோடி) வருமானம் ஈட்டும் மக்கள் மீது நான் வரிவிதிப்பை அதிகரிக்க மாட்டேன். நடுத்தர மக்கள் மீது எந்த வரிச்சுமையையும் திணிக்க மாட்டேன். அவர்கள் போதுமான அளவுக்கு வரி செலுத்துகிறார்கள்.

பருவநிலை மாற்றம் நமது போராட்டம் மட்டுமல்ல. இது உலகளாவிய போராட்டம். 15 சதவீதத்துக்கும் குறைவான கார்பன் வெளியேற்றத்தை அமெரிக்கா செய்கிறது.

சீன அதிபர் ஜின்பிங்கிடம் நான் பேசியபோது, நாங்கள் போட்டியை வரவேற்கிறோம், நாங்கள் மோதலை எதிர்பார்க்கவில்லை என்று சொன்னேன். ஆனால் அமெரிக்க நலன்களை முற்றிலும் பாதுகாப்பேன் என்பதை தெளிவுபடுத்தினேன். இந்திய பசிபிக் பிராந்தியத்தில் நமது வலுவான ராணுவ இருப்பை தொடர்வோம். இது, மோதலை தொடங்குவதற்கு அல்ல, மோதலைத்தடுப்பதற்கு என்றும் அவரிடம் கூறினேன்.

துப்பாக்கி வன்முறையில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கு என்னாலான அனைத்தையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோ பைடன் பேசியபோது, அவருக்கு பின்னால் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியும் இருந்தனர். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதி உரையாற்றியபோது அவருக்கு பின்னால் இரண்டு பெண்கள் இருந்தது இதுவே முதல்முறை. இது புதிய வரலாறாக பார்க்கப்படுகிறது.

Next Story