கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் ராணுவ மோதல் - சிறுமி உள்பட 13 பேர் பலி


கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் ராணுவ மோதல் - சிறுமி உள்பட 13 பேர் பலி
x
தினத்தந்தி 30 April 2021 7:21 PM GMT (Updated: 30 April 2021 7:21 PM GMT)

கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் ராணுவ மோதலில் சிறுமி உள்பட 13 பேர் பலியாகினர்.

பிஷ்கெக், 

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு கடந்த 1991-ம் ஆண்டு கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றன. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சனை நீடிக்கிறது.

இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லையில் இரு தரப்பு ராணுவம் இடையே பலமுறை மோதல்கள் வெடித்துள்ளது.

இந்த நிலையில் கிர்கிஸ்தானில் தஜிகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள பேட்கன் பிராந்தியத்தில் உள்ள நீர்நிலை யாருக்கு சொந்தம் என்பதில் சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று தஜிகிஸ்தான் ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய அந்த நீர்நிலையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். அப்போது அங்கு வந்த கிர்கிஸ்தான் ராணுவ வீரர்கள் இதனை தடுக்க முற்பட்டனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது.‌ இரு தரப்பையும் சேர்ந்த வீரர்கள் கற்களை வீசி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.‌ இதில் தஜிகிஸ்தான் ராணுவத்தினர் பேட்கன் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதில் ஒரு சிறுமி உள்பட கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து‌ பேட்கன் பிராந்தியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த மோதலில் தஜிகிஸ்தான் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

அதேசமயம் இந்த மோதல் நடந்த சில மணி நேரங்களுக்கு‌ பின்னர் தஜிகிஸ்தானுடன் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டதாக கிர்கிஸ்தான் தெரிவித்தது.

Next Story