இஸ்ரேலில் பரிதாபம்; மத திருவிழாவில் கடும் கூட்ட நெரிசல்; 44 பேர் சாவு


இஸ்ரேலில் பரிதாபம்; மத திருவிழாவில் கடும் கூட்ட நெரிசல்; 44 பேர் சாவு
x
தினத்தந்தி 30 April 2021 7:53 PM GMT (Updated: 30 April 2021 7:53 PM GMT)

இஸ்ரேலில் மாத திருவிழாவின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.‌

ஜெருசலேம்,

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற முனிவர் ரப்பி ஷிமோன் பார் யோச்சாய். இவர் தனது மரணம் மகிழ்ச்சியுடன் நினைவுகூரப்பட வேண்டும் என மக்களுக்கு போதித்தார்.

இதனால் அவரது நினைவு தினத்தையொட்டி இஸ்ரேலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ‘லாக் பி ஓமர்' என்கிற பேரில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள புனித நகரமான மவுண்ட் மெரான் நகரில் உள்ள அவரது கல்லறையில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் திரள்வது வழக்கம்.

ஒருபுறம் பிரார்த்தனை, மதச்சடங்குகள், மற்றொருபுறம் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு ஆண்டும் திருவிழா களைகட்டும்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ‘லாக் பி ஓமர்' திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில், கொரோனா தடுப்பூசியின் பலனாக இஸ்ரேலில் வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ‘லாக் பி ஓமர்' திருவிழாவை நடத்த அரசு அனுமதி வழங்கியது.‌ ஆனாலும் பொதுமக்கள் இதில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால் நேற்று முன்தினம் மாலை முதலே மக்கள் கூட்டம் அலையென திரண்டது. இரவுக்குள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டனர்.

கல்லறைக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக படியில் ஏறி கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஒரு தரப்பினர் படிக்கட்டில் நழுவி பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தனர். ஒரு பனிச்சரிவை போல படிக்கட்டுகளில் இருந்தவர்கள் சரசரவென உருண்டு விழுந்து கீழே இருந்தவர்களை நசுக்கினர்.

இதனால் கூட்டத்தினர் மத்தியில் பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. பீதியடைந்த அனைவரும் முண்டியடித்துக்கொண்டு வெளியேற முற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் மயக்கம் ஏற்பட்டும் கீழே விழுந்த பலர் கூட்டத்தினரின் காலில் சிக்கி நசுங்கினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அங்கு போலீசார் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்சில் மற்றும் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே இந்த சம்பவம் ஒரு கடுமையான பேரழிவு என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, நிலைமையை ஆய்வு செய்ய மவுண்ட் மெரான் நகருக்கு விரைந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் அந்த நாட்டின் அதிபர் ருவன் ரிவ்லன் இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள இந்த சமயத்தில் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது அந்த நாட்டு மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story