இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் - அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை


இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் - அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை
x
தினத்தந்தி 1 May 2021 9:48 PM GMT (Updated: 1 May 2021 9:48 PM GMT)

இந்தியா முழுவதும் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 3 லட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான தகவலில் 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையிலும் அந்த முயற்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. கொரோனா அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது,

வைரசை கட்டுப்படுத்தி விட்டதாக வெற்றி மிகவும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இப்போது நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் இந்தியா முழுமைக்கும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது. அது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். 

உங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டுமென்றால் நான் கூறியது தான் வழி. உடனடி, இடைநிலை மற்றும் நீண்ட கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும்.

தற்போதுள்ள மிகவும் முக்கியமான விஷயம் என்பது உடனடியாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்துவது, விநியோகிப்பது, மருந்துகளை ஏற்பாடு செய்தவது, பிபிஇ கவச உடைகளை ஏற்படுத்துவது, இது போன்ற நடவடிக்கைகள் மற்றொரு மிகவும் முக்கியமான விஷயம் நாடு முழுவதும் முழு ஊரடங்களை அமல்படுத்துவதாகும்.

முழுமையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது தான் வைரஸ் பரவலை குறைக்க வழி. நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த யாரும் விரும்பமாட்டார்கள். ஆறு மாதங்களாக நீங்கள் அதை செய்யும்போது அது ஒரு பிரச்சினை தான்.  ஆனால், ஒரு சில வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார். 

Next Story