அமீரகத்தில் கடந்த 3 மாதங்களில் செயற்கை மழைப்பொழிவிற்காக வானில் 75 தடவை ‘கிளவுட் சீடிங்’ செய்யப்பட்டுள்ளது; தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்


அமீரகத்தில் கடந்த 3 மாதங்களில் செயற்கை மழைப்பொழிவிற்காக வானில் 75 தடவை ‘கிளவுட் சீடிங்’ செய்யப்பட்டுள்ளது; தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 2 May 2021 6:03 PM GMT (Updated: 2 May 2021 6:03 PM GMT)

அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவிற்காக கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில் விமானங்கள் மூலம் 75 தடவை ரசாயன பவுடர் வானில் தூவப்பட்டது.

இது குறித்து அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செயற்கை மழை திட்டம்

செயற்கை மழை எனப்படுவது சாதாரணமாக வானில் கலைந்துள்ள மழை மேகங்களை ரசாயனங்களின் உதவியால் ஒன்றிணைத்து மழையை பொழிய வைக்கும் முறையாகும். பொதுவாக அமீரகம் ஒரு பாலைவனம் சார்ந்த பகுதி என்பதால் இந்த பகுதியில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. இங்கு ஆண்டுக்கு 100 மில்லி மீட்டருக்கும் குறைவாகவே மழைப்பொழிவு ஏற்படுகிறது.

இதன் காரணமாக மலை அடிவாரங்களில் உள்ள பகுதிகளில் விவசாயத்திற்காகவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் அமீரக அரசானது, அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை ஏற்படுத்தியது. இதற்காக அமீரகத்தில் முதன் முதலில் கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 1 கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது.

‘கிளவுட் சீடிங்’ முறை

இந்த திட்டத்தில் செயற்கை மழையை வரவழைக்க ரசாயன விதையை தூவும் ‘கிளவுட் சீடிங்’ எனப்படும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘கிளவுட் சீடிங்’ எனப்படுவது விமானம் மூலமாக ரசாயனம் சிறு சிறு உருளைகளில் பொடியாக அடைக்கப்பட்டு இறக்கைகள் மூலம் வானில் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மேகங்களில் புகையாக தூவி விட வைப்பதாகும்.

மேகத்தில் விதைப்பு செய்யும் ‘கிளவுட் சீடிங்’ முறையில் பீச் கிராப்ட் கிங் ஏர் சி-90 என்ற விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு சிறுசிறு குழாய்கள் போல் உள்ள அமைப்பில் வைக்கப்படுகிறது. அந்த குழாய் அமைப்புகள் சிறப்பு கருவிகளுடன் விமானத்தின் இருபுறமும் உள்ள இறக்கை பகுதியில் பொருத்தப்படுகிறது.

75 தடவை தூவப்பட்டது

பிறகு உயரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அந்த குழாய்களில் தீப்பற்ற வைக்கப்பட்டு எரிய வைப்பதின் மூலம் அதில் இருந்து வெளிவரும் ரசாயன புகையானது மேகத்தில் கலக்கப்படுகிறது. இந்த முறையில் தொடர்ந்து ஆண்டுதோறும் வானில் ரசாயனம் தூவப்பட்டு வருகிறது.

இதில் நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்களில் 75 தடவை அமீரக வானில் ‘கிளவுட் சீடிங்’ முறையில் ரசாயன பவுடர் தூவப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மொத்தம் 390 முறை ‘கிளவுட் சீடிங்’ செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ‘கிளவுட் சீடிங்’ முறை மூலம் அமீரகத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு 100 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story