அமீரகத்தில் இருந்து 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது; இந்திய தூதர் பவன் கபூர் தகவல்


அமீரகத்தில் இருந்து 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது; இந்திய தூதர் பவன் கபூர் தகவல்
x
தினத்தந்தி 2 May 2021 6:15 PM GMT (Updated: 2 May 2021 6:15 PM GMT)

அமீரகத்தில் இருந்து 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது என்று இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்தார்.

உலக நாடுகள் உதவி

இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன்கள் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் திண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு உலக நாடுகள் இந்தியாவுக்கு நட்புறவுடன் உதவுவதாக அறிவித்தது மட்டுமல்லாமல் அதற்கான ஏற்பாடுகளையும் போர்கால அடிப்படையில் செய்து வருகின்றன.

ஆக்சிஜன் வினியோகம்

இதில் அமீரகம் நட்பு நாடான இந்தியாவுக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் இந்தியாவில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான சி-17 என்ற போர் விமானம் மூலம் 12 கிரையோஜெனிக் கன்டெய்னர்களில் நிரப்பப்பட்ட திரவ ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்தியாவுக்கு அமீரகம் தரும் என கூறினார். தொடர்ந்து அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக அமைப்புகள், பாப்ஸ் இந்து கோவில், சீக்கிய குருத்துவாரா போன்ற மத வழிபாட்டு தலங்கள் சார்பிலும் ஆக்சிஜன் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது

இதில் அமீரக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 140 மெட்ரிக் டன் எடையுள்ள மருத்துவ ஆக்சிஜன் டேங்கர்களில் நிரப்பப்பட்டு லாரிகள் மூலம் அபுதாபியில் இருந்து சாலை வழியாக துபாய் கொண்டு வரப்பட்டது. பின்னர் துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு கப்பல் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தூதர் பவன் கபூர் கூறும்போது, ‘‘140 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் துபாய் வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது இந்தியா-அமீரகத்திற்கு இடையேயான அரசு மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பை இந்த நடவடிக்கைகள் காட்டுவதாக உள்ளது’’ என தெரிவித்தார்.


Next Story