அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியானதா? ஈரான் விளக்கம்


அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியானதா? ஈரான் விளக்கம்
x
தினத்தந்தி 3 May 2021 5:58 PM GMT (Updated: 3 May 2021 5:58 PM GMT)

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்தநிலையில் ஈரானில் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின.

அதாவது ஈரான் 4 அமெரிக்க கைதிகளை விடுவிப்பதற்கு பிரதிபலனாக அமெரிக்காவில் உள்ள 4 ஈரான் கைதிகளை விடுவிப்பதோடு, பொருளாதார தடைகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள 7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 51 ஆயிரத்து 721 கோடியே 74 லட்சம்) மதிப்பிலான ஈரான் நாட்டின் சொத்துக்களையும் விடுவிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் உறுதி செய்யப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அமெரிக்காவுடனான கைதிகள் பரிமாற்றம் பற்றிய அறிக்கைகள் யதார்த்தத்துடன் ஒத்துப்போகவில்லை. கைதிகளின் பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினையாக இருந்து வருகிறது. அது எப்போதும் ஈரானின் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினையை கண்காணிப்பது அணுசக்தி பேச்சு வார்த்தையிலிருந்து தனிப்பட்ட தாகும்" எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவும், ஈரானுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது என கூறி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

 


Next Story