173 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு: துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம்; துணை அதிபர் டுவிட்டரில் மகிழ்ச்சி


173 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு: துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சிக்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம்; துணை அதிபர் டுவிட்டரில் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2021 8:02 PM GMT (Updated: 4 May 2021 8:02 PM GMT)

துபாயில் தொடங்க உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இறுதிக்கட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக கண்காட்சி

உலக வர்த்தக கண்காட்சியான எக்ஸ்போ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. முதன்முதலாக 1851-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்த உலக வர்த்தக கண்காட்சி நடத்தப்பட்டது. இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இக்கண்காட்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 2020-ம் ஆண்டு உலக வர்த்தக கண்காட்சியை எந்த நகரத்தில் நடத்துவது என்பது குறித்து கடந்த 2013-ம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ரஷ்யாவின் எகாடெரின்பர்க், பிரேசிலின் சாவ் பாலோ, துருக்கியின் இஸ்மீர் ஆகிய நகரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த தேர்வின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரம் தேர்வு செய்யப்பட்டது.

அக்டோபரில் தொடங்குகிறது

2020-ம் ஆண்டின் உலக கண்காட்சிக்கான தேர்வில் பல்வேறு நாடுகள் போட்டி போட்டதில் இறுதியாக துபாய் நகரம் தேர்வு செய்யப்பட்டது நகர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பாரீஸில் இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் இதுகுறித்த அறிவிப்புகள் வாணவேடிக்கைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த கண்காட்சியானது துபாயில் கடந்த (2020) ஆண்டு நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த கண்காட்சி அடுத்த(2021) ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி, துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வருகிற அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து அடுத்த(2021) ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

173 நாடுகளின் பிரதிநிதிகள்

துபாயில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக கண்காட்சியை பார்க்க 2½ கோடி பார்வையாளர்கள் உலகமெங்கும் இருந்து வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்கான ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 173 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 24 சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் வருகிற அக்டோபர் மாதம் எந்த தடையுமின்றி எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியை நடத்த தயார் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘துபாயில் எக்ஸ்போ 2020 தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தில் இன்று (அதாவது நேற்று) கலந்துகொள்ளும் 173 நாடுகள் மற்றும் 24 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை துபாய் வரவேற்கிறது. துபாய் தயாராக உள்ளது மற்றும் 190 நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. உலகம் தற்போது மிகப்பெரிய கலாசார நிகழ்ச்சியின் மூலம் மீண்டு வருவதற்கு தயாராகி வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.


Next Story