இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கு காலவரையற்ற தடை; அமீரக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு


இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கு காலவரையற்ற தடை; அமீரக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 8:09 PM GMT (Updated: 4 May 2021 8:09 PM GMT)

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அமீரக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா 2-வது அலை

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. மின்னல் வேகத்தில் பரவிய காரணத்தால், உலக நாடுகள் பல இந்தியாவில் இருந்து பயணிகள் விமான சேவைக்கு தடை விதித்தது.அமீரகத்தின் சார்பிலும், அமீரக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கடந்த ஏப்ரல் 24-ந் தேதி நள்ளிரவு முதல் 10 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வருகை புரியும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

இதில் ஏற்கனவே அறிவித்திருந்த 10 நாட்கள் தடையானது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமீரக விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் கடந்த வாரம் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டு இருந்தன.

மறு அறிவுப்பு வரும் வரை...

இந்தநிலையில், நேற்று அமீரக தேசிய அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், ‘‘மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்தியாவில் இருந்து அமீரகம் வருகை புரிய தடை நீட்டிக்கப்படுகிறது’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் அமீரகம் வருவதற்கு இந்திய பயணிகளின் தடையானது கால வரையறையின்றி தொடர்கிறது.

இதன் காரணமாக இம்மாதம் சொந்த ஊருக்கு சென்று வர திட்டமிட்டு இருந்தவர்கள் தங்கள் விமான டிக்கெட்களை ரத்து செய்து வருகின்றனர். மேலும் விமான சேவையானது குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியா செல்லும் பயணிகளின் அளவும் கணிசமாக குறைந்து வருகிறது

கட்டுப்பாடுகள்

இதில் அமீரக குடியுரிமை பெற்றவர்கள், தூதரக அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், கோல்டன் விசா பெற்றவர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் விமானங்கள் ஆகியோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு அமீரகம் வருகை புரியும் அவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிறகு அவர்கள் வருகை தந்த 4 மற்றும் 8-வது நாட்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். அதேபோல அவர்கள் வந்த நாட்களில் இருந்து 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story