மியான்மர் வன்முறை உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் - ஐ.நா.வுக்கான சீன தூதர் எச்சரிக்கை


மியான்மர் வன்முறை உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் - ஐ.நா.வுக்கான சீன தூதர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 May 2021 8:56 PM GMT (Updated: 4 May 2021 8:56 PM GMT)

மியான்மர் வன்முறை உள்நாட்டு போருக்கு வழி வகுக்கும் என்று ஐ.நா.வுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேபிடாவ்,

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இதனால் மியான்மரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இதனிடையே மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.‌ மேலும் மியான்மர் பிரச்சினைக்கு தீர்வுகாண தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை தென்கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மியான்மரின் வன்முறை உள்நாட்டுப் போர் உள்ளிட்ட குழப்பமான சூழ்நிலைக்கும் வழிவகுக்கும் எனவும் ஐ.நா.வுக்கான சீனத் தூதர் ஜாங் ஜுன் எச்சரித்துள்ளார்.

அதே வேளையில் எந்த ஒரு தவறான கையாளுதலும் மியான்மரில் மேலும் பதற்றத்துக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Next Story