மொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது : உலக சுகாதார அமைப்பு


மொத்த கொரோனா பாதிப்பில்  46% இந்தியாவில் பதிவாகிறது : உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 5 May 2021 8:48 AM GMT (Updated: 5 May 2021 8:48 AM GMT)

உலக அளவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா, 

உலக அளவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும்  பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்படும் தினசரி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால், இந்தியாவில் இதுவரை மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது.  

இந்தியாவில் இருமுறை உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளும் திண்டாடி வருகின்றன.  

உலக அளவில் கடந்த வாரம் 57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு பலியாகினர்.  

இந்த நிலையில், உலக அளவில் ஏற்படும் புதிய பாதிப்புகளில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் வாராந்திர பெருந்தொற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி இந்த எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை பெருமளவில் பதிவாகமல்  இருக்கக் கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதன்படி பார்த்தால் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகின் மொத்த மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 18 சதவீதம் ஆகும். 


Next Story