இந்தியாவின் கொரோனா சூழ்நிலையை ஒப்பிட்டு சீனா ஏவிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது; அடுத்த வாரம் பூமியில் விழும்!


இந்தியாவின் கொரோனா சூழ்நிலையை ஒப்பிட்டு சீனா ஏவிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது; அடுத்த வாரம் பூமியில் விழும்!
x
தினத்தந்தி 5 May 2021 5:25 PM GMT (Updated: 5 May 2021 5:25 PM GMT)

சீனா கடந்த வாரம் ஏவிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அந்த ராக்கெட் அடுத்த வாரம் பூமியில் விழலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பிஜீங்,

சீனா கடந்த 29-ம் தேதி ’மார்ச்5பி’ ராக்கெட் மூலம் என்ற விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் டியன்ஹி விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடி தொடர்பில் இருந்த இணையதள செய்தி நிறுவனம் இந்தியாவின் கொரோனா சூழ்நிலையையும், சீன ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையும் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தது.

அதில், சீனாவில் ராக்கெட் ‘மார்ச்5பி’ ஏவப்படுவதையும், இந்தியாவில் கொரோனா நோயாளியால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்வதையும் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்துடன், சீனா விளக்கு ஏற்றுகிறது, இந்தியா விளக்கு ஏற்றுகிறது’ என எழுதப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு கண்டன குரல்கள் எழுந்ததையடுத்து சீன செய்தி நிறுவன தளத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது.

இதற்கிடையில், சீனா அனுப்பிய ’மார்ச்5பி’ ராக்கெட் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திவிட்டு மீண்டும் பூமி திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில், விண்வெளியில் விண்வெளி நிலைய கலத்தை நிர்ணயித்த இடத்தில் நிலை நிறுத்திய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்ப செயல்படத்தொடங்கியது.

ஆனால், அந்த சீன ராக்கெட்டில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது பூமியின் எந்த பகுதியில் விழும் என்ற தகவலும் முழுமையாக கிடைக்காததால் விஞ்ஞானிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் மைக் ஹாவர்ட் கூறுகையில், சீனாவின் ’மார்ச் 5பி’ ராக்கெட் மே 8-ம் தேதி வாக்கில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளித்துறை ராக்கெட்டின் பாதையை கண்காணித்து வருகிறது. 

ராக்கெட் விண்வெளியில் இருந்து பூமியின் எந்த பகுதி வழியாக நுழையப்போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அது எங்கு விழப்போகிறது என்று தெரியும்’ என்றார்.  



விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போதே இதுபோன்ற விண்வெளி ராக்கெட் பாகங்கள் எரிந்துவிடும். ஆனால், இந்த ராக்கெட்டின் அளவு 22 டன் கொண்டது. இதனால், சற்று அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால், ராக்கெட்டின் மிகப்பெரிய பாகங்கள் பூமியின் வளிமண்டலத்தையும் மீறி பூமியின் மீது விழலாம்’ என்றார்.

ஆனால், ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் சர்வதேச கடல்பகுதி அல்லது தங்கள் நாட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலேயே விழும் என்று சீன ராணுவத்தின் ராக்கெட் தயாரிப்பு பிரிவு பயிற்றுவிப்பாளர் சாங் சங்பிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு சீனா ஏவிய ’மார்ச் 5பி’யின் முதல் ராக்கெட் விண்களத்தின் சிதைந்த பாகங்கள் ஐவரிகோஸ்ட் நாட்டில் உள்ள சில கிராமங்கள் மீது விழுந்து வீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story