இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
x
தினத்தந்தி 5 May 2021 10:59 PM GMT (Updated: 5 May 2021 10:59 PM GMT)

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.

இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மென்ட்டவாய் தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான‌ இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 29 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ உடனடி தகவல்கள் இல்லை. அதேபோல் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சுலவேசி மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததும், சுமார் 6,500 பேர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story