ஆப்கானிஸ்தான் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: 11 பேர் பலி! மேலும் 25 பேர் படுகாயம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 May 2021 9:10 PM GMT (Updated: 10 May 2021 9:16 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பேருந்து ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாபூல், 

ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகளால் ஏராளமனோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள சாபூல் மாகாணத்தில் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் பயணிகள் பஸ் ஒன்று சிக்கி வெடித்து சிதறியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாபூல் மாகாண ஆளுநர் குல் இஸ்லாம் சியால், “பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 11 நபர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 25 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இது குறித்த கேள்விகளுக்கு தலீபான் பயங்கரவாதிகள் இயக்கம் மவுனம் சாதிக்கிறது” என்று அவர் கூறினார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் போர்நிறுத்த அறிவிப்பு வந்த பிறகு காபூலில் ஒரு பள்ளிக்கு வெளியே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் பெரும்பாலோர் மாணவிகள் ஆவர். மேலும் அந்த சம்பவத்தில் 165 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Next Story