12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் எப்.டி.ஏ அனுமதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 May 2021 10:32 PM GMT (Updated: 10 May 2021 10:32 PM GMT)

12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதி அளித்துள்ளது.

நியூயார்க், 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசரும், ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. கொரோனா தொற்றுக்கு எதிராக அதிக எதிர்வினையாற்றும் தன்மை கொண்ட காரணத்தால் பைசர் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பைசர் தடுப்பு மருந்து சிறந்த பலனை அளித்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு,  அவசரகால பயன்பாட்டுக்கு பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அனுமதி அளித்துள்ளது. 12 - 15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது உலக அளவில் இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் ‘பைசர்’ நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. 

தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டநாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.

Next Story