ஜெருசலேம் வன்முறை: இஸ்ரேல் - பாலஸ்தீன் அமைதி காக்க உலகநாடுகள் வேண்டுகோள்


ஜெருசலேம் வன்முறை: இஸ்ரேல் - பாலஸ்தீன் அமைதி காக்க உலகநாடுகள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 May 2021 12:27 AM GMT (Updated: 11 May 2021 12:27 AM GMT)

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன் போராட்டக்காரர்கள் அமைதிகாக்க உலகநாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
 
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் விதித்தது. மேலும், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். 

இந்த போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை குறிவைத்து காசா முனை பகுதியில் ஆட்சி செய்துவரும் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் அமைந்துள்ள ஒருசில வீடுகளில் சிறு பாதிப்பு ஏற்பட்டபோதும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாலஸ்தீனர்கள் என இரு தரப்புமே ஒருவரை ஒருவர் தாக்கி வருவதால் மோதல் அதிகரித்து ஜெருசலேமில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீன மக்களும் தாக்குதலை கைவிட்டு அமைதிகாக்கும்படி உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.  

இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மீது கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டது. இஸ்ரேல் மிகப்பெரிய பலமுடன் திருப்பி கொடுக்கும்’ என்றார். இதனால், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Next Story